Tuesday, April 19, 2016

கரிசனம் காட்டுங்கள் ஐந்தறிவு உயிர்களிடம்!




 'இன்ஸ்டிடியூட் ஆப் அனிமல் வெல்பேர்' என்ற பெயரில், கால்நடை பராமரிப்பில் ஈடுபட்டு வரும், டாக்டர் சாதனா ராவ்: என் தாத்தா மிகப்பெரிய பசுமடத்தை பராமரித்து வந்தார். எனவே, சிறுவயதிலேயே கால்நடைகள் மீது பிரியம் கொண்டேன். எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பை முடித்தவுடன், கால்நடை பராமரிப்பில் என் பணிகளை துவக்கினேன். ஆரம்பத்தில், ஆதர வற்ற சில பசுக்களை வீட்டிலேயே வைத்து வளர்த்தேன். பசுக்களின் எண்ணிக்கை, 60ஐ தாண்டியபோது, அதற்கென தனி இடம் தேடி, மயிலாப்பூரில் பசுமடம் அமைத்தேன். புளூ கிராஸ் அமைப்பு மற்றும் கோவில்களில் இருந்து ஒப்படைக்கப்பட்ட மாடுகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட பால் கறவை நின்ற மாடுகள் என, என் பசுமடம் விரிவடைந்தது. தற்போது, நீலாங்கரை, மெப்பேடு, திருவள்ளூர் - வெங்கடாபுரம், திருப்போரூர் என, நான்கு பசு மடங்களில், 1,200க்கும் மேற்பட்ட பசுக்களை, 100 பணியாளர்களுடன் பராமரித்து வருகிறேன். அநாதரவாகத் திரியும் மாடுகளைக் கண்டால், அருகில் உள்ள பசுமடங்களில் ஒப்படையுங்கள். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், பல மாடுகளை நாங்கள் மீட்டு வைத்துள்ளோம். அரசு ஏதேனும் இடம் ஏற்பாடு செய்து கொடுத்தால், உதவியாக இருக்கும்.இறைச்சி தேவைக்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் தினமும், ஆயிரக்கணக்கில் மாடுகள், தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகின்றன. மாடுகள் கடத்தப்படும் தகவல், சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கிடைத்தால், காவல்துறை உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கி விடுவேன். இதனால், கொலை மிரட்டல் வரை வந்தாலும், கவலைப் படுவதில்லை.பசுக்களுக்கு உணவளிப்பது மகா புண்ணியம். அதேசமயம், வீட்டில் மீதமாகும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் கொடுக்கலாம்; அழுகியது வேண்டாம். எக்காரணம் கொண்டும், அரிசி சாப்பாடு கொடுக்க வேண்டாம். அது, பசுவுக்கு வயிற்றில் அசிடிட்டியை உண்டாக்கும்.அகத்திக்கீரை கொடுக்கும்போது, கனமான தண்டுகளை தவிர்த்து, கீரை கட்டை பிரித்து, சற்று மெல்லிய தண்டுகளை மட்டும் கொடுக்கவும். இல்லையெனில், மாடு மெல்லும் போது தண்டுகள் உடைந்தாலும், அது கூராக இருந்தாலும், பசுவின் வயிற்றை கிழித்துவிடும்.மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் முன், உடல் மரத்துப் போக ஊசி போட்டு, வெட்ட வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அச்சம் காரணமாக, அட்ரினாலின் என்ற ஹார்மோன் அதற்கு அதிகமாக சுரந்து, அந்த மாமிசத்தை உண்ணும் மக்களுக்கு தான், தீங்கு வரும். ஒரு தேசம் எத்தகையது என்பதை, அந்நாட்டு மக்கள், மிருகங்களை நடத்தும் விதத்தை வைத்தே கூறலாம் என்பர்; கரிசனம் காட்டுங்கள், அந்த ஐந்தறிவு உயிர்களிடம்.

0 comments:

Post a Comment